Friday, October 28, 2011

ஐ கூகுள்ள்ள்ள்ள்ள்ள்ள்


ஐ கூகுள்ள்ள்ள்ள்ள்ள்ள்
கூகுள் எல்லோருக்கும் தெரியும். கேட்டவுடன் கொடுக்கும் கடவுளைப் போல் நம் தேடல்களுக்கு உடனடி தீர்வு தருவார் கூகுளாண்டவர் . சரி அதென்ன ஐ கூகுள். ஒன்றுமில்லை கூகுள் தமது பயனர்களுக்காக தேடல் வசதியோடு இன்ன பிற வசதிகளையும் தருகிறது. சிலர் மட்டைப்பந்து விளையாட்டு நிலவரத்தை தெரிந்து கொள்ள ஒவ்வொரு முறையும் மட்டைப்பந்து நிலவர தளத்திற்கு செல்ல வேண்டும். தற்போதைய சூடான செய்திகளை அறிந்த கொள்ளவும் அந்த செய்திகள் தளத்திற்கு செல்ல வேண்டும்.

ஆனால் இவையாவும் ஒரே இடத்தில் கிடைக்கப்பெற்றால் .......................
அது தான் ஐகூகுள்..........
இந்த ஐகூகுள் மூலம்  ஒரு பயனர் தன் விருப்பத்திற்கிணங்க தன் முகப்பு பக்கத்தை அமைத்துக் கொள்ளலாம்.
எப்படி?
முதலில் உங்கள் கூகுளை திறந்து ஐகூகுள் என்று தேடி, தீர்வு வரும் பக்கத்தை சொடுக்கினால் கீழ்வரும் திரை வரும்.

உங்களுக்கு முகப்பு பக்கம் எப்படி தென்பட வேண்டுமோ உங்கள் விருப்பப்படி தீம்கள் , வண்ணங்கள் அதில் தெரிவு செய்து கொள்ளலாம்.
உங்கள் நாடு மற்றும் ஊரை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
பிறகு உங்களுக்கு எந்த வகையான செய்திகள் முகப்பு பக்கத்தில் வர வேண்டும் என்பதையும் தேர்ந்தெடுக்கலாம். (எ-டு) – பொழுதுபோக்கு,விளையாட்டு, தொழில் எனப்பல....  
திரையின் வலது கீழ மூலையில் “Sign In”  என்று தென்படும் . அதை சொடுக்கி  உங்கள் கூகுள் அடையாள பெயர் மூலம் உள்நுழையுங்கள்.

இப்போது உங்களுக்கு ஐகூகுளின் தரிசனம் கிடைத்துவிட்டது.இனி ஒவ்வொரு முறை நீங்கள் உலவியை திறந்தாலும் ஐகூகுள் உங்கள் முன் நிற்கும்.
இகூகுளின் மற்றொரு சிறப்பு என்னவெனில் இந்த முகப்பு பாக்கத்தில் நம் விருப்பப்படி Gadget  எனப்படும் செயலிகளை (சரியா?) பயன்படுத்தலாம் என்பதுதான்.
இணையத்தில் நிறைய Gadgetகள் கிடைகின்றன. சங்க இலக்கியம் செயலி அவற்றுள் ஒன்று. பழந்தமிழ் இலக்கியங்களான இன்னா நாற்பது, இனியவை நாற்பது இவற்றில் பாடல் மற்றும் பொருளோடு வரும்.

ஒவ்வொருமுறை நாம் பக்கத்தை Refresh செய்யும்போது புது செய்யுள் தோன்றுவது அழகு. (இணையத்தை சுற்றுவதும் ஆயிற்று ,செய்யுள் கற்றது போன்றும் ஆயிற்று.)
இதே போல் திருக்குறள் Gadget கிடைக்கிறது. தமிழிலும், ஆங்கிலத்திலும் பாடல் மற்றும் பொருளோடு வருகிறது.
Gadgetகளுக்கு  இங்கே அழுத்தவும்.
பயன்படுத்தி மகிழுங்கள்.
உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தவறாமல் தெரிவியுங்கள்.

Friday, October 21, 2011

வானவில்லின் பிறப்பு


வானவில்லின் பிறப்பு  

தெரிந்து விட்டது எனக்கு!!
வானவில் எப்படி தோன்றுகிறது என்று..

மழையை ரசிக்க நீ வீட்டை விட்டு
வெளியே வரும் போது
உன்னை காண வெட்கப்பட்டது சூரியன்!!

வெட்கத்தால் அதன் கன்னம் சுருங்கியபோது
விரிந்ததே "வானவில்"..

கொள்ளைக்காரியடி நீ!!

  

நான் எழுதிய மேற்கண்ட கவிதை எழுத்து தளத்தில் வெளியாகியுள்ளது.
பதிவர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள். நான் பதிவுலகுக்கு புதிது. தாங்கள் பதிவை படித்த பின்பு உங்கள் எண்ணங்களை (நன்றோ தீதோ) பின்னூட்டத்தில் பதிவு செய்தால் என் எழுத்தின் குறைகளை சரி செய்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.எனவே நீங்கள் தாராளமாய் தங்கள் கருத்தை பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Wednesday, October 19, 2011

நீர்த்துளி ஒன்று உன் மேல் காதல் கொண்டது......

                      

கடலில் உள்ள ஒரு நீர்த்துளி ஒன்று உன் மேல் காதல் கொண்டது ..

அதனால்

கடும்வெயிலில் தவம் புரிந்தது,
கரிய மேகமாய் வானை அடைந்தது,
குளிர் மழையாய் பொழிய அழுதது,
குபீரென பூமியில் குதித்தோடியது….

பாறைகளில் மோதி பள்ளங்களை நிரப்பி,
வேர்களில் புகுந்து அருவிகளில் வீழ்ந்து
கரைகளை முட்டி அணைகளை தாண்டி,
ஓடைகளில் ஒடுங்கி ஆறுகளில் அருகி,

ஒருவழியாய் அடைந்தது உன் வீட்டு அண்டாவில்..

வந்தாய் நீயும்,
மெதுவாய் அள்ளினாய் நீரை,
அந்த நீர்துளியையும் சேர்த்து


மெழுகினாய் உன் தேகத்தை அந்நீரால்
உருகியது நீர்த்துளி,
உளம் மகிழ்ந்து விட்டது உயிரை..



ஏன் இப்படி இருக்கிறாய் பெண்ணே!!

நான் எழுதிய மேற்கண்ட கவிதை எழுத்து தளத்தில் வெளியாகியுள்ளது.

பதிவர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள். நான் பதிவுலகுக்கு புதிது. தாங்கள் பதிவை படித்த பின்பு உங்கள் எண்ணங்களை (நன்றோ தீதோ) பின்னூட்டத்தில் பதிவு செய்தால் என் எழுத்தின் குறைகளை சரி செய்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.எனவே நீங்கள் தாராளமாய் தங்கள் கருத்தை பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

Tuesday, October 18, 2011

பட்டாசில்லா தீபாவளி..

இந்த தீபாவளிக்கு அனேகமாக எல்லோரும் உடைகள், இனிப்புகள் வாங்கி இருப்பீர்கள். பட்டாசு வாங்கபோகிறீர்கள் என்றால் கொஞ்சம் இங்கே  கவனித்து செல்லுங்கள். 

பெரும்பாலும் பட்டாசு இல்லாமல் தீபாவளி இல்லை. சிறுவயதில் இருந்தே  நாம் எல்லோரும் தீபாவளிக்கு ஜட்டி வாங்குகிரோமோ இல்லையோ சீனி வெடி. ஓலை வெடி , பாம்பு வெடி கண்டிப்பாக வாங்குவோம். நரகாசுரனை கிருஷ்ணன் கொன்றதற்கான  மகிழ்ச்சியை பட்டாசு மூலம் வெளிபடுத்துவதாக வீட்டில் சொல்லுவார்கள்..ஆனால் நமக்கு அது தேவை இல்லை. வெடிக்கும் போது ஏற்படும் "டாம் டம் டும்  " சத்தம் தான்.

தலையணை பக்கத்தில் பட்டாசோடு தீபாவளி முன்னிரவை கழித்த பொழுதுகள் நிறைய உண்டு. அவற்றின் தீமைகளை அறியும் வரை ......

ஐந்து ஆண்டுகளுக்கு முன், தீபாவளி மூன்று நாட்கள் இருக்க நண்பர்கள் சிலர் பட்டாசு என்ன வாங்குவது  என்று தெரு முனை ஒன்றில் விவாதித்து கொண்டிருந்தோம். அப்போது ஒரு சிறுவன் அணுகுண்டு ஒன்றை மரம் ஒன்றின் அருகில் மெதுவாக பற்ற வைத்தான்.மெல்ல புகையை வெளித்தள்ளிய அணுகுண்டு டமாரென்ற பெரும்சப்தத்துடன் வெடித்தது.அங்கிருந்த சிறுவர்கள் குதித்து கைகொட்டி சிரித்தார்கள். 

அப்போது நாங்கள் கண்ட காட்சி முகத்தில் அடித்தாற்போல் இருந்தது.
ஒரு சிறிய சிட்டுக்குருவி அம்மரத்தில் கூடு ஒன்றைக் தாழ்வாக கட்டியிருந்தது.பெரும்சப்த்ததுடன் வெடித்த வெடியின் அதிர்ச்சியில் அங்கிருந்த இருகுருவிகளும் கீழே விழுந்தன. பின்பு தட்டு தடுமாறி மிக முயன்று பட படவென்று சிறகை விரித்து விரைவாக பறந்தோடி வானத்தில் தொலைந்தன.. வேகமாக பக்கத்துக்கு வீட்டு அக்காவிடம் அனுமதி வாங்கி மாடிக்கு சென்று  குருவியை தென்படுகிறதா என்று தேடி பார்த்தோம்.ம்ஹூம் .. அன்று இரவு வரை சிறுவர்கள் வெடித்துக் கொண்டு இருந்ததால் குருவிகள் திரும்ப வரவேயில்லை.
  
இரவு முழுவதும் உறக்கம் வரவில்லை.திடீரென்று நம்மை யாரவது பின்னால் இருந்து லேசாக பயமுறுத்தினால், தூங்கிகொண்டிருக்கும் போது சத்தம் போட்டால் எவ்வுளவு பயப்படுகிறோம். உருவத்தில் சிறிய அந்த குருவிக்கு வெடி வெடித்த பொது ஏற்பட்ட அதிர்ச்சி நிச்சயம் வலி மிகுந்ததாய் இருக்கும் என்று உணர்ந்தது மனம்.

 வித்தியாசம்  இல்லாமல் எங்கள்  எல்லோரையும் பாதித்திருந்தது அந்த நிகழ்வு. அன்று முடிவு எடுத்தோம் இனி பட்டாசு வாங்குவதில்லை என்று.
பிற உயிர்களை துன்புறுத்தி மகிழ்ச்சி அடைவது போன்று ஒரு ஈனத்தனம் இல்லை என்று அந்த குருவி கீழே விழுந்து எழ முயன்ற போது சொன்னதாக எனக்கு உரைத்தது.அன்றிலிருந்து கடந்த ஐந்து தீபாவளிகளாக நாங்கள் பட்டாசு கொளுத்துவதில்லை.இந்த ஆண்டும் மிகப்பெருமையுடன் அதை தொடர இருக்கிறோம்.

பட்டாசுகளால் காற்று மாசு, ஒலி மாசு போன்றவை ஒரு புறம் இருக்க சத்தமில்லாமல்(?) நாம் நம் சொந்த பறவைகளை அழித்து வருவது வேதனைக்குரியது.

கர்ப்பிணி தாய்மார்கள், நோயாளிகள், மருத்துவமனையில் இருப்பவர்கள் ஏற்கனவே உடலால் அனுபவித்து வரும் சோதனையை மேலும் வலுப்படுத்துகிறது இந்த பட்டாசு என்னும் நரகாசுரன்.


தொலைக்காட்சிகளில் நாம் அடிக்கடி காண்பது "பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து. தொழிலார்கள் தீயில் கருகி பலி." நம்மை பொறுத்த மட்டிலும் செய்தியாய் போய்விட்ட அந்த தொழிலார்களின் வாழ்க்கை பின்னால் நம்முடைய மகிழ்ச்சிக்காக அவர்கள் தங்கள் உயிரை இழந்திருக்கிறார்கள் என்ற உண்மை நம்ச்கு எப்போது உரைக்கும்??

பெரும்பாலான தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடு தொகை கிடைப்பதில்லை என்பது கொடுமையிலும் கொடுமை.(எல்லாம் அந்த நாசமாய்ப் போன  லஞ்ச அரக்கர்கள் தான்)

எனவே இப்பதிவை  படிக்கும் அனைத்து பதிவுலகர்களுகும் அன்புடன் நாங்கள் வைக்கும் வேண்டுகோள் "தயவு செய்து பட்டாசு கொளுத்தாதீர்கள்!! அமைதியாக இனிமையாக தீபாவளி கொண்டாடுங்கள்..கொண்டாடுவீர்கள் என்று நம்புகிறோம் .........

(பி.கு) குருவி புகைப்படம் நன்றி : "பெயர் அறியாத நண்பர்"

மற்ற  இரண்டு படங்களும் உபயம் : கூகுளாண்டவர்

Saturday, October 1, 2011

சித்திரக்கதைகள்

நேற்று எங்கள் நிறுவனத்தின் முதலாளியிடம் பேசிக்கொண்டு இருந்தேன். பேச்சு வியாபாரம்,வெற்றிகள்,தோல்விகள்,அடுத்து செய்ய வேண்டியவை என்று நீண்டு கொண்டே போய் நவராத்ரியில் முடிந்தது..அதிலும் தொடர்ந்து கொண்டு மகாபாரதத்தில் வந்து நின்றது..மகாபாரதத்தின் கதைகள்,கிளை கதைகள் பற்றி நிறைய விவாதித்தோம்.மகாபாரதத்தை பற்றி பேசி கொண்டு இருக்கும் போது முதலாளி எப்படி இந்த இளம் வயதில் மகாபாரதம் பற்றி இவ்வுளவு தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்று ஆச்சர்யமாக கேட்டார்..


"அம்மா சின்ன வயதில் நான் தூங்குவதற்காக சொல்வார்கள்",என்றேன்.

'ம்' என்றவர், "என்னுடைய அக்கா பையன் எப்போதும் வீடியோ கேம்ஸ் விளையாடிக்கொண்டே  இருக்கிறான். அவனுக்கு கதைகள் சொல்லி பழக்கபடுத்து என்று அக்காவிடம் சொன்னேன். அவன் கேட்பதாக இல்லை என்றாள்".

நான், "உண்மைதான் .இப்போதுள்ள குழந்தைகள் அப்படி. குழந்தை பேசத்தொடங்கும்போதே இதிகாசங்கள் பற்றி புகட்ட வேண்டும்.எனக்கு அம்மா கொஞ்ச காலம் சொன்னார்.பிறகு நானாக இதிகாசங்கள்,புராணங்கள்  தேடி படித்து கொண்டேன்."


அவர்,"ம்ம்,இப்போது கூட மகாபாரத,ராமாயண,விக்கிரமாதித்தன் கதைகள் சிடி வடிவில் வருகின்றன. அதை கூட பார்க்க பழக்கலாம்."

நான்,"ம்ஹூம்,தவறு என்றேன்"

"ஏன்?", அவர்

"குழந்தைகளுக்கு கதைகள் பார்க்க சொல்லுவதைவிட கேட்க சொல்லுவது தான் நல்லது..ஏன் எனில், கேட்கும் போது குழந்தைகள் "குண்டலம் என்றால்  என்ன?, அது எப்படி இருக்கும்?, அஸ்திரம் எவ்வாறு இருக்கும்?, ராவணன் பத்து தலைகளை வைத்து கொண்டு எப்படி ஒருக்களித்து படுப்பார்? போன்ற கேள்விகளை எழுப்புவார்கள்.அவர்களுக்கு நாம் பதில் சொல்லும் போது அவர்கள் அந்த பதிலை கற்பனை செய்து பார்ப்பார்கள்.இதன் மூலம் அவர்களுடய கற்பனை திறனை வளர்க்கலாம்.எதிர் காலத்தில் அறிவியல்,கலை போன்றவற்றில் தங்கள் சொந்த கற்பனைகளை அவர்கள் முயற்சி  செய்வார்கள்."(தமிழ் சினிமாவுக்கும் காப்பி அடிக்காத படங்கள் கிடைக்கும்.)

மாறாக சிடி மூலம் குழந்தைகள் கதைகளை பார்த்தால் கதைகளை,நீதிகளை தெரிந்து கொள்ளலாம்.ஆனால் கற்பனை செய்யக்கூடிய வாய்ப்பு அமையாது.
திரையில் என்ன தெரிகிறதோ அதை மட்டுமே எண்ணுவார்கள்,கற்பனை செய்வார்கள்.அதில் தோன்றும் பாத்திரங்கள் எல்லா குழந்தைகளின் மனதிலும் ஒரே அமைப்பாக பதியும்."என்றேன்.

"கதை சொல்லும்  பாட்டிகள், தாத்தாக்களை முதியோர் இல்லத்துக்கு அனுப்பி விட்டோம்.நமக்கு பணத்தை தவிர வேற எதுவும் தெரியாது.. சரி வேறு என்னதான் செய்யலாம்?" என்று கேட்டார்.

"நான் சிறு வயதில் என்  மாமா வீட்டிற்கு விடுமுறை சென்றபோது கதை நூல்கள் பலவற்றை படித்தேன்.எடுத்துகாட்டு மகாபாரதத்தில் உள்ள கிளை கதைகள், தெனாலி ராமன் கதைகள்.இவை யாவும் சித்திரங்கள் மற்றும் வசனங்கள் சேர்ந்த சித்திரக்கதைகளாக இருந்தன.(சிறுவர்மணி,சிறுவர்மலரில் வரும் படக்கதைகள் போல்). இவ்வகை கதைகள் கதை சொல்லிகள் இல்லாத இடத்தை நிரப்பும்.மேலும் இவ்வகை கதைகள் ஒரு காட்சியில் இருந்து  மற்றொரு  காட்சிக்கு தாவும் போது, இடையில் இருக்கும் வெற்றிடத்தை குழந்தைகள் தங்கள் கற்பனையால் நிரப்ப வாய்ப்பு கிடைக்கும் .இம்மாதிரி கதைகள் தான் என்னுடைய கற்பனைகளை வளர்த்தன (என்று நான் நம்புகிறேன்??).

சிறு வயதில் நான் படித்த சித்திரக்கதைகள் "கதைக்களம்" (பெயர் சரியாக் நினைவில்லை) என்ற பெயரில் மாதமொருமுறை வெளிவந்தது. மாமா அவற்றை சேகரித்து வைத்திருப்பார்.விடுமுறைக்கு செல்லும் போது அவற்றை ஒரே மூச்சாக படித்து விடுவேன்.சந்தேகங்களை மாமாவிடம் கேட்பேன் .பொறுமையாக பதில் சொல்லுவார்."

"மகிழ்ச்சி", என்றார் முதலாளி.. 

அத்தோடு மணி பத்து ஆகிவிட்டதால் வீட்டுக்கு கிளம்ப சொன்னார்.விடை பெற்று கொண்டு பேசிக்கொண்டு இருந்ததை சிந்தித்தபடியே வந்தேன்.அப்போது சட்டென "நாம் என் சித்திரக்கதைகள் எழுத முயற்சிக்க கூடாது என்று தோன்றியது". சாத்தியமா என்று தெரியவில்லை. ஆனால் ஆசை இருக்கிறது..